×

போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர்… மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய நடவடிக்கை : அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை : அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தடுத்து நிறுத்தப்பட்டது அதிமுக ஆட்சியில்தான் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். பழைய ஓய்வுதிய திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஜன.9ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து தொழிலாளர் நல இணை ஆணையர் தலைமையில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை 3 கட்டங்களாக நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு எட்டப்படாததால் போக்குவரத்து ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் பேருந்துகள் இயக்கத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சிவசங்கர், ” தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கு பாதிப்பின்றி வழக்கம்போல் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளில் 2 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 2 கோரிக்கைகள் நடைமுறையில் உள்ளன. அகவிலைப்படி உயர்வை நிறுத்தியது அதிமுக ஆட்சியில்தான். கடந்த ஆட்சியில் நிறைவேற்றப்படாத பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.தீபாவளியின்போது போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு போனஸ் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

நிதி நிலை காரணமாக அகவிலைப்படி உயர்வு உடனடியாக வழங்கப்படாத நிலை உள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பின்றி அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான பேருந்துகள் குறித்த நேரத்தில் இயக்கப்பட்டுள்ளன. போராடுவது தொழிலாளர்கள் உரிமை; ஆனால் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போராட்டம் நடத்த வேண்டும். தொழிற்சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க கூட்டமைபின் தொழிலாளர்களே பணிக்கு வந்து பேருந்துகளை இயக்கி வருகின்றனர். தங்கள் அமைப்பு பலத்தை காட்டுவதற்காக போராட்டதை அறிவித்த கூட்டமைப்பின் தலைவர்கள், தற்போது அதனை கைவிட முடியாமல் தவிக்கின்றனர்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர்… மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய நடவடிக்கை : அமைச்சர் சிவசங்கர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Sivashankar ,Chennai ,Transport Minister ,Sivasankar ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி